என்னதான் கவனமாக இருந்தாலும் கர்ப்ப காலத்தில் சில நோய்கள் வந்து தொல்லை தருவது சகஜம் தான்.
அந்த வகையில் கர்ப்பிணிகளுக்கு வருகிற திடீர் சர்க்கரை நோய் பற்றியும், அதற்கான காரணங்கள் பற்றியும்,
அதை வெல்லும் வழி முறைகள் பற்றியும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
கர்ப்ப காலத்தில் வரும் சர்க்கரை நோயில் மூன்று வகை உண்டு.
குழந்தைப் பருவத்தி லிருந்தே நீரிழிவு உள்ளவர்கள் முதல் வகை. அதாவது, டைப் 1 டயாபடீஸ்.
இவர்கள் நோயின் ஆரம்பத் திலிருந்தே இன்சுலின் சிகிச்சையில் தான் இருப்பார்கள்.
ஆகவே, இவர்கள் மகப்பேறு மருத்துவர், நீரிழிவு நிபுணர் மற்றும் ஒரு உணவியல் நிபுணர் உதவியுடன்,
தங்களுக்குத் தேவையான உணவு முறையையும், இன்சுலின் அளவையும் தெரிந்து கொண்டு பின்பற்ற வேண்டும்.
இரண்டாவது வகையான டைப் 2 டயாபடீஸ், இருபது வயதுக்கு மேல் வருவது இவர்கள் மாத்திரை,
இன்சுலின் ஊசி மற்றும் உடற் பயிற்சிகள் மூலம் தங்கள் நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருப்பார்கள்.
இவர்கள் கர்ப்பம் தரித்ததும் மாத்திரை, இன்சுலின் இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று
மகப்பேறு மருத்துவர் சொல்லும் யோசனையைப் பின்பற்ற வேண்டும்.
சில நீரிழிவு மாத்திரைகள் சிசுவைப் பாதித்து, அதன் வளர்ச்சிப் போக்கை மாற்றி விடலாம் என்பதால் மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றுவது அவசியம்.
மூன்றாவது பிரிவினர் தான் இந்தக் கட்டுரையின் ‘வி.ஐ,பி’க்கள். சில பேர் நமக்குத்தான் நீரிழிவு இல்லையே என்று சந்தோஷமாக இருப்பார்கள்.
ஆனால், கர்ப்பமானதும் ‘இதோ நான் வந்துவிட்டேன்’ என்று அழையாத விருந்தாளியாக வந்து சேர்ந்து விடும் நீரிழிவு.
இதற்கு ‘கர்ப்பகால நீரிழிவு’(Gestational Diabetes Mellitus - GDM) என்று பெயர்.
இது பொதுவாக, கர்ப்பம் தரித்த 24-வது வாரத்துக்குப் பிறகு வருகிறது.
இப்போது இவ்வகை நீரிழிவு ஏற்படுவது கர்ப்பிணிகளிடம் அதிகரித்து வருகிறது.
இதற்கு என்ன காரணம்?
கருப்பையில் உள்ள நச்சுக் கொடியில் (Placenta) புரோஜெஸ்டிரான், ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன.
இவை கர்ப்பிணியின் ரத்தத்தில் இருக்கிற இன்சுலினுக்கு எதிராக வேலை செய்யும்.
இதனால், கர்ப்பிணிக்கு இன்சுலின் செயல்பாடு குறைந்து, ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
இதை சரி செய்ய கர்ப்பிணிக்கு இன்சுலின் அதிகமாக சுரக்கும்.
இன்சுலின் ரத்தச் சர்க்கரையை சரியான அளவுக்குக் கொண்டு வந்து விடும். இது கர்ப்பிணிகள் எல்லோருக்கும் இயல்பாக நிகழ்கிறது.
ஆனால், சிலருக்கு மட்டும் கர்ப்ப காலத்தில் அதிகரிக்கிற ரத்தச் சர்க்கரையைக் குறைப்பதற்கு இன்சுலின் தேவையான அளவுக்குச் சுரக்காது.
இதன் காரணமாக, தொடர்ந்து அவர்களுக்கு ரத்தச் சர்க்கரை அதிகமாகவே இருக்கும்.
அப்போது, அவர்களுக்குக் ‘கர்ப்ப கால நீரிழிவு’ வருகிறது.
சிகிச்சை எடுக்கா விட்டால்?
கர்ப்பிணிக்கு அடிக்கடி சிறுநீர்ப் பாதைத் தொற்று, காளான் தொற்று, பூஞ்சைத் தொற்று போன்றவை ஏற்படலாம்.
கருச்சிதைவு ஏற்படலாம். ரத்த அழுத்தம் அதிகமாகி, ‘முன் பிரசவ வலிப்பு’ (Pre-eclampsia) வரலாம்.
கர்ப்பத்தின் கடைசி மூன்று வாரங்களில் குழந்தை கருப்பை யிலேயே இறந்து விடலாம்.
குழந்தை அதிக எடையுடன் அல்லது பெரிய தலையுடன் பிறக்கலாம். பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை ஏற்படலாம்;
குழந்தை பிறந்ததும் இறந்து விடலாம். கர்ப்பிணிக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
நோய் கட்டுக்குள் இருந்தால், இத்தனைக்கும் ‘டாட்டா’ காட்டி விடலாம்!
எச்சரிக்கை மணி!
பெரும்பாலான கர்ப்பிணிகளு க்குப் பிரசவம் முடிந்ததும், நீரிழிவு மறைந்து விடும்; சிகிச்சையும் தேவைப்படாது.
என்றாலும், பாதிப்பேருக்கு அடுத்த 5-லிருந்து 20 வருடங்களுக் குள் டைப் 2 டயாபடீஸ் வர வாய்ப்புள்ளது.
ஆகவே, இதை ஓர் எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொண்டு, சரியான உணவு முறையைக் கடைப்பிடித்து,
தினமும் உடற்பயிற்சி செய்து, உடல் எடையைப் பராமரித்து டயாபடீஸ் வராமல் தடுத்துக் கொள்ள வேண்டும்.