எப்படி புயலுக்கு பெயர் வைக்கப்படுகிறது ?

Fakrudeen Ali Ahamed
ஒவ்வொரு வருடம் மழைக் காலம் வந்தவுடன் எதாவது புயல் உருவாகிக் கொண்டே தான் இருக்கிறது. 

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை, தாழ்வு மண்டலம், புயல் என செய்திகள் வரத்தொடங்கி விடும். 

மறக்காமல் வரும் புயலுக்கு ஒரு பெயரும் அறிவித்தி ருப்பார்கள். பெயர் சொல்லி அழைத்தால் அருகில் வருவதற்கு அது குழந்தையா? 

பின்னர் எதற்கு புயலுக்குப் பெயர் வைக்க வேண்டும்? 

இந்தப் பெயர்களை எல்லாம் எப்படி, யார் வைக்கிறார்கள்? என்பதைப் பற்றி இந்தக் கட்டுரை விளக்க இருக்கிறது. 

ஏன் பெயர் வைக்கப் படுகிறது? 

உலகத்தின் பெருங்கடல்கள் அனைத்திலும் உருவாகும் புயல்கள் வெவ்வேறு பெயரில் அழைக்கப் படுகிறது. உதாரண மாக இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்கள் ஆங்கிலத்தில் Cyclone எனப்படும். 

அதே போல் அட்லாண்டிக் கடலில் உருவாகும் புயல்கள் Hurricane எனவும், பசிபிக் பெருங்கடலில் வரும் புயல்கள் Typhoon எனவும் அழைக்கப்படுகின்றன. 

வருடா வருடம் உலகம் முழுவதும் வீசும் புயல்களில் பெரும் பாலானவை பெரும் சேதத்தினை ஏற்படுத்த வல்லவை. 

புயலின் பாதிப்பு, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்த விவரங்களை பதிவு செய்து வைப்பதற்கு இந்தப் பெயர்கள் பயன் படுத்தப் படுகின்றன. 

இந்தியாவில் புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை 2004 – ஆம் ஆண்டு முதல் வழக்கத்தில் இருக்கிறது. 

எப்படி பெயர் வைக்கப் படுகிறது? 

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம் உலகம் முழுவதிலும் நிலவும் தட்பவெட்ப நிலைகளைக் கண்காணித்து வருகிறது. 

இந்த அமைப்பில் 191 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பு உலகத்தினை 7 தட்பவெட்ப மண்டலங்களாக பிரித்துள்ளது. அதில் இந்தியா,” வட இந்தியப் பெருங்கடல்” மண்டலத்தில் இடம் பெற்றிருக் கிறது. 

இந்தியா உட்பட வங்கதேசம், மியான்மர், மாலத்தீவு, பாகிஸ்தான், ஓமன், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் இந்த மண்டலத்தில் இணைக்கப் பட்டிருக்கிறது. 

இந்த எட்டு நாடுகளும் எட்டு பெயர்கள் கொண்ட பட்டியலை தயாரித்து வைத்திருக் கிறது. மொத்தம் 64 பெயர்கள் பட்டியலிடப் பட்டிருகின்றன. 

இந்தியப் பெருங்கடல் பகுதியில் புயல்கள் உருவாகும் போது இந்த அட்டவணை யிலிருந்து தான் பெயர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றன. 

இதனை இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கண்காணிக்கிறது. ஒவ்வொரு புயலின் போதும் வரிசைக் கிரமமாக பட்டியலில் இருந்து பெயர்கள் வைக்கப் படுகின்றன.

தற்போது கரையைக் கடந்திருக்கும் புயலிற்கு கஜா என்ற பெயரை பரிந்துரை செய்தது இலங்கை ஆகும்.The post was originally published in Neotamil published here with permission
Tags: