குழந்தைகளிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்க !

Fakrudeen Ali Ahamed
தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை குறைத்து, குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி விடுங்கள். உங்கள் குழந்தைகள் காலம் முழுக்க உங்களுக்கு நன்றி கூறுவார்கள்.
கோடை விடுமுறை வந்தாச்சு! எல்லோர் வீட்டிலும் குட்டீஸ்களின் சேட்டை ரொம்ப அதிகம் தான். 

குழந்தைகள் அட்டகாசம் தாங்க முடியாமல் சிலர் ‘Summer Camp’ எனப்படும் கோடைகால சிறப்பு முகாம்களு க்கும், இன்னும் சிலர், வெளியூர்களில் உள்ள தாத்தா -பாட்டி வீடுகளுக்கும் குழந்தைகளை அனுப்பிவிடுவர். 

சில பெற்றோர்கள் தொலைக்காட்சி பார்த்து விட்டு போகட்டும் என்றும் இருந்து விடுகிறார்கள். குழந்தைகள் அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பதால் வரும் பின் விளைவுகளை நான் சொல்லத் தேவை இல்லை. 

வேண்டுமானால் அதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். உங்கள் பிள்ளைகள் இனி எந்த விடு முறையிலும் உங்களுக்கு தொல்லை தராமல் இருக்க வேண்டும் என்றால் சில சிறுவர் கதைப் புத்தகங்களை வாங்கி வந்து எப்படி படிப்பது என சொல்லிக் கொடுங்கள். 

பிறகு, அனைத்து விடுமுறை நாட்களிலும் தான் உண்டு, தன் புத்தகம் உண்டு என்று இருப்பார்கள். பள்ளிப்பாடத்தையும் மிக நன்றாக படிப்பார்கள்.
எல்லாம் சரி தான். குழந்தைகள் ஆர்வமுடன் படிக்க வேண்டுமே என்கிறீர்களா? 

அதற்கு புத்தகம் அவர்களுக்கு பிடித்ததாக இருக்க வேண்டும். அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று நீங்கள் அறிந்து அந்த புத்தகத்தை வாங்கலாம்.

குழந்தைகளுக்கு புத்தகம் வாங்குவது எப்படி?

நீங்கள் மட்டும் கடைக்குச் சென்று புத்தகம் வாங்கி வராதீர்கள். இந்தக் கால குழந்தைகள் வேறு ரகம். அவர்களே அவர்களுக்கு பிடித்ததை தேர்வு செய்து கொள்வார்கள்.

உங்கள் குழந்தைகள் வீட்டில் ஏதோ ஒன்றை சிறப்பாக செய்தவுடன், அவர்களை பாராட்டும் தொனியில் ஒரு நல்ல கதைப் புத்தகம் வாங்கித் தருவதாக உறுதியளி யுங்கள். 

அப்போது அவர்களிடம் என்ன கதைப் புத்தகம் வேண்டும் என்றும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அடுத்த நாள் காலையில் நீங்கள் அலுவலகம் செல்லும் போது இன்று மாலை புத்தகம் வாங்கி வருகிறேன் என்று கூறி ஆர்வத்தை தூண்டுங்கள். 
ஆனால், புத்தகம் வாங்கி வருவதும், வாங்கி வராமல் மேலும் ஆர்வத்தை தூண்டுவதும் உங்கள் விருப்பம்.

புத்தகம் வாங்க வில்லை என்றால் குழந்தையிடம் மன்னிப்புக் கோரி விட்டு, அன்று மாலையோ அல்லது அடுத்த நாளோ குழந்தையை கடைக்கு அழைத்துச் சென்று சிறிது நேரத்தை அங்கேயே செலவழித்து அவர்களுக்குப் பிடித்த புத்தகத்தை வாங்கிக் கொடுங்கள். 

ஒரு குழந்தைக்கு ஒரு புத்தகம் வாங்குவதே போதுமானது. பல புத்தகங்கள் வாங்கினால் அவர்கள் இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்று அடுத்த புத்தகம் நோக்கி தாவி விடுவார்கள். 

3-8 வயது குழந்தை களுக்கு படக்கதை புத்தகமே சிறந்தது. புத்தகம் வாங்கியா யிற்று. இனிமேல், படிக்கும் ஆர்வத்தை தூண்ட வேண்டும் அல்லவா?

ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரி. பொதுவாக 4-8 வயது குழந்தைகள் ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு நடப்பார்கள். சில குழந்தைகள் அம்மா எதைச் சொன்னாலும் கேட்பார்கள். 

சில குழந்தைகள் அப்பா கூறுவதை மட்டும் தான் கேட்பார்கள். சில குழந்தைகள் நாம் செய்யாதே என்றால் அதைத்தான் முதலில் செய்வார்கள். கள நிலவரம் இப்படியிருக்க படிக்கும் ஆர்வத்தை தூண்டுவது எப்படி என்று அறியலாம் வாருங்கள்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செய்யக்கூடிய சிறந்த விஷயங்களில் ஒன்று அவர்களை கட்டி அணைப்பது. பெற்றோர் குழந்தைகளை அடிக்கடி கட்டி அணைப்பதன் அவசியத்தை வேறொரு கட்டுரையில் எழுதுகிறேன். 

நீங்கள், உங்கள் குழந்தைக்கு பிடித்த கதைப் புத்தகத்தை கையில் வைத்து க்கொண்டு குழந்தையைக் கட்டிப் பிடித்துக் கொள்ளுங்கள்.

‘கதை நேரம்’ ஒன்றை உருவாக்குங்கள். இன்னும் சில நாட்களுக்கு இதே நேரம், கதை படிப்போம் என்று ஆர்வத்தை தூண்டுங்கள். 

கதைகள் குழந்தை களிடத்தில் சொற்களை உள்வாங்கும் திறனையும், சொற்களை திரும்ப சொல்லும் திறனையும், வாசிப்புத் திறனையும் அதிகரிக்கிறது. 
 
புத்தகத்தை பார்த்து கதை சொல்லும் போது அவர்கள் மொழியிலேயே சொல்லுங்கள். அவர்களது நண்பர்கள் கதை கூறுவதைப் போல் முக பாவனை மற்றும் உடல் மொழியை வைத்துக் கொள்ளுங்கள்.

இன்று கதை கேட்டுவிட்டு நாளை எனக்கொரு கதை சொல் என்று கூறுங்கள். நாமும் ஒரு கதைப் புத்தகம் எழுதுவோம் என்று கூறி ஆர்வத்தை அதிகப்படுத் துங்கள்.

சொல்லிக்கொடுக்கும் போது அவர்களின் கையை பிடித்து படங்களை தொட்டு, புன்னகையுடன் சொல்லிக் கொடுக்கவும்.

அதிகம் கதைகள் கேட்டு வளர்பவர்கள், அதிகம் கதைகளைப் படைப்பார்கள்.
பெரியவர் ஒருவர், குழந்தையை படிக்கச் சொல்லிக் கொடுத்து வழிநடத்தும் போது, குழந்தைகள் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்கிறது ஒரு அறிவியல் ஆய்வு. 

அக்குழந்தைகள் தான் பிறகு பெரும் படிப்பாளிகளாக வருகிறார்கள் என்கிறது அந்த ஆய்வு. படங்களுடன் கூடிய புத்தகம் எனில், குழந்தைகளின் படிக்கும் ஆர்வம் பல மடங்காகிறது. 

குழந்தைகளுக்கு வார்த்தைகள் தெரியாவிடினும், படங்களைக் காட்டி, கதைகளைப் புரிந்து கொள்ள நீங்கள் உதவுவது மிகவும் எளிது.

படிப்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதை புரிந்து படிக்க சொல்லி தருவது தாய்-தந்தையின், தாத்தா-பாட்டியின் கடமை அல்லவா?

படிக்கச் சொல்லிக் கொடுப்பது எப்படி?

எப்படித்தான் படிக்கச் சொல்லி தருவது? ‘ஒரு இடத்தில உக்கார மாட்டேங் கிறாங்களே’ என்று யோசிக்கிறீர்களா? University of Sussex- ஐ சேர்ந்த மூன்று ஆய்வாளர்கள், 2455 குழந்தைகளிடம் நடத்திய ஆய்வு பல ஆச்சர்ய மூட்டும் தகவல்களை நமக்கு தருகிறது. 
அந்த ஆய்வின் மூலம் அவர்கள் 3 வழிகளை கண்டுபிடித்தனர்; அந்த வழிகள் மூலம் மிகவும் எளிதாக உங்கள் குழந்தை களுக்கு நீங்கள் படிக்கச் சொல்லித் தரலாம். அறிவியல் ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்ட இந்த 3 முறைகளை நாம் காணலாம்.

குழந்தைகளிடம் ஊடாடுங்கள்: 

Interactive என்பதை தமிழில் ஊடாடுதல் எனலாம். ஒரு ஊடாடும் வழியில் புத்தகங்கள் படித்தல், எடுத்துக் காட்டுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம், கேள்விகளைக் கேட்டு, சொற்களுக்கு விளக்கம் கொடுத்து கதைகளை படிக்க சொல்ல வேண்டும். 

அதன் மூலம் குழந்தைகள் நிறைய சொற்களை தெரிந்துகொண்டு விரைவில் உங்கள் துணையின்றி படிக்கத் தொடங்கி விடுவார்கள்.

சில சொற்களை மீண்டும் மீண்டும் கூறவும்: 

பல முறை ஒரே சொல்லைக் கேட்டால், குழந்தைகள் அதை நன்றாக புரிந்து கொண்டு, அந்தச் சொல்லை நீண்ட காலம் நினைவில் வைத்து கொள்ள முடியும் என்கிறது ஆய்வு. 

அந்த புதிய சொல்லை வேறு யாராவது, எங்காவது கூறினால் நீங்கள் கூறிய கதையின் நினைவு குழந்தைக்கு வருவது இயல்பு தானே.

பிடித்த கதைகள் எவை என்பதை அறிந்து அவைகளை மட்டும் மீண்டும் மீண்டும் கூறுங்கள்: 

நமக்கு தான் கேட்ட கதைகள் ஒரே அலுப்பு. குழந்தைகளுக்கு அப்படியல்ல. நமக்கு பிடித்த பாடலை பலமுறை விரும்பி நாம் கேட்பதைப் போல் குழந்தைகளுக்கு கதைகள் கேட்பது. 

நீங்கள் சில நாட்கள் இடைவெளியில் 3 அல்லது 4 கதைகளை திரும்ப திரும்ப கூறுங்கள். இடையிடையே புதிய கதைகளையும் கூற வேண்டும்.

வாசிப்புப் பழக்கம் ஏன் அவசியம்?

எவ்வளவோ புத்தகங்கள் இருக்கின்றன. படிக்க தான் நமக்கு நேரம் இல்லை. வேலை, வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கிறோம். 

இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு உங்கள் குழந்தைக்கு உங்களது ஆசைகளையும், பொறுப்பு களையும் திணித்து விடுவீர்கள். அப்போது சிறுவர் கதைப் புத்தகத்தைக் கூட தொட விடமாட்டீர்கள். 

தேர்வு, மதிப்பெண் என்று ஊரோடு ஒத்து வாழ்வீர்கள். அதனால், இப்போதே சிறுவர் புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி விடுங்கள்.
இப்போது நீங்கள் வாசிப்பு பழக்கத்தை அறிமுகப்படுத்த வில்லை என்றால் என்ன பிரச்சினை?

வாசிப்பு மட்டுமே மேதைகளை உருவாக்கும்; தன்னம்பிக்கையைத் தரும்; ஆளுமைகளாக உருவாக்கும். வாசிப்பு பழக்கம் அதிகம் இல்லாத குழந்தைகள் சிறுவர்க ளானதும், 
அவர்களிடம் ‘உங்களுக்கு யாரை பிடிக்கும்?’ என்று பொதுவான கேள்வியைக் கேட்டால் அதற்கு விஜய் அங்கிள் என்றோ அல்லது சிவ கார்த்திகேயன் அங்கிள் என்றோ ஏதோ சில நடிகர்கள் பெயரைத் தான் கூறுவார்களே தவிர அறிஞர்கள், அறிவியலாளர்கள், ஞானிகள் பெயரைக் கூற மாட்டார்கள்.

வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தவில்லை எனில், பதின்ம வயதில், அவர்கள் நடிகர்கள் விஜயையும், சிவ கார்த்திகேயனையும் தங்களுக்குத் தலைவர்களாக நினைத்துக் கொண்டு, 

இன்று ஒரு கூட்டம் எவ்வாறு ரஜினி, கமல் போன்ற நடிகர்களை ‘தலைவா’ என்று கூப்பாடு போட்டுக் கொண்டு திரிகிறதோ அப்படி இருக்கவே வாய்ப்பு அதிகம்.

இளமையில் கல் – ஓளவைப் பாட்டி ஆத்திசூடியில் கூறியது. காரணம் புரிகிறதல்லவா? நீங்களும் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை குறைத்து, குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி விடுங்கள். உங்கள் குழந்தைகள் காலம் முழுக்க உங்களுக்கு நன்றி கூறுவார்கள்.
Tags: