நீர்க்கட்டி பற்றிய அரைகுறை அறிவு படிங்க !

Fakrudeen Ali Ahamed
0
சீரற்ற மாதவிடாய் கோளாறுக்காக ஒரு பெண் என்னிடம் வந்திருந்தார். அவருக்குச் சில பரிசோதனைகளைச் செய்யச் சொல்லி எழுதிக் கொடுத்தேன்.
நீர்க்கட்டி பற்றிய அரைகுறை அறிவு
காலையில் போனை எடுத்துப் பார்த்தால் நள்ளிரவில் அவரிடமிருந்து நிறைய முறை போன் வந்திருந்தது தெரிந்தது. அன்று காலை அறுவை சிகிச்சை ஒன்றைச் செய்ய வேண்டியிருந்தது.

அந்தப் பெண்ணோ போன் செய்து ஒரே அழுகை. அல்ட்ரா சவுண்டு பரிசோதனையில் அவருக்கு ஏதோ பெரிய பிரச்சினை என்று சொல்லி விட்டார்கள் போல.

சரி என்று அறுவை சிகிச்சை அறைக்கு அருகிலேயே வந்து விடச் சொன்னேன். பார்த்தவுடனேயே கைகளைப் பிடித்துக் கொண்டு மீண்டும் அழுதார். இரவு முழுவதும் அழுததில் கண்கள் வீங்கியிருந்தன.
என்ன சொன்னார்கள் எனக் கேட்டபோது, “PCOD - Polycystic Ovary Disease இருக்குன்னு சொல்லிட்டாங்க” என்று திரும்பவும் அழ ஆரம்பித்து விட்டார். இரவில் இணையத்தில் அதைப் பற்றித் தேடிப் பார்த்திருந்திருக்கிறார்.

“எனக்குக் கல்யாணமே ஆகாதா, குழந்தையே பிறக்காதா, நான் என்ன பண்ணுவேன்?” என்று அழுது கொண்டே இருந்தார்.

அரைகுறை அறிவு நல்லதல்ல

இதில் நம் அரைகுறை அறிவு தான் பிரச்சினை. தற்போது பலரும் எதற்கெடுத்தாலும் இணையத்தில் எதையாவது படித்து விட்டுத் தாங்களாகவே முடிவுக்கு வந்து மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.
அரைகுறை அறிவு நல்லதல்ல
உடல்ரீதியான குறைபாடு குறித்துப் படிப்பது தவறல்ல. ஆனால், மருத்துவரை அணுகினால் தான் பிரச்சினையைத் துல்லியமாக வரையறுத்து, அதற்கேற்றாற் போல் தீர்வுகாண முடியும்.

அப்படி இல்லாமல் வெறும் தகவலை மட்டும் தெரிந்து கொள்வது நம்மைக் குழப்பத் தான் செய்யும். PCOD வந்த எல்லாருக்கும் குழந்தையே பிறக்காது என்பது மாயை. அதற்கு சிகிச்சை அளிக்க முடியும்.

ஆனால், தீர விசாரித்து சரியான மருத்துவரை அணுகி, தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும். மூன்று அல்லது ஆறு மாதங்களுக்குச் சிகிச்சை எடுத்த பிறகு இன்னும் பிரச்சினை சரியாகவில்லை என மனம் தளர்வது கூடாது.

இந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுப் பலன் எதுவும் இல்லை என நாமே முடிவுசெய்து இடையில் மருத்துவரை மாற்றுவதும் தவறு. பிறர் சொல்வதைக் கேட்டு அதை மட்டுமே நம்புவதும் தவறு.
PCOD இருந்தாலே திருமணமும் மண வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு விடும் என்பதும் தவறு. பிரச்சினையின் தன்மையைப் பொறுத்து சிகிச்சை அமையும்.

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS - Polycystic ovary syndrome)

ஓவரி என்பது சினைப்பை. பெண் குழந்தை பிறக்கும் போதே இதில் லட்சக்கணக்கான சினை முட்டைகள் முதிர்ச்சி அடையாமல் இருக்கும்.
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்
பருவ வயதையொட்டி ஹார்மோன்களின் சுரப்பால் இந்த ஏராளமான சினை முட்டைகளில் ஒரு முட்டை முதிர்ச்சி அடைந்து, சினைப்பையில் இருந்து வெளிப்பட்டு, சினைக்குழல்களை நோக்கி வரும்.
சினைப்பையில் பலூனில் தண்ணீர் நிரப்பப்பட்ட பைகள் மாதிரி பல கட்டிகள் (cyst) இருப்பது தான் PCOD. இப்படிப் பல திரவக் கட்டிகள் இருப்பதையே Poly Cystic Ovary Syndrome என்கிறோம்.

தண்ணீரால் நிரப்பப்பட்ட சிறு சிறு பைகள் மாதிரியான கட்டிகள் கருப்பையில் வட்ட வட்டமாக நெக்லஸ் போல இருக்கும். அதனால் கருமுட்டை வெளிப்படுதல் தடைப்பட்டு, குழந்தைப் பிறப்பில் பிரச்சினைகள் வரலாம்.

இது சிறியது, மிதமானது, தீவிரம் என மூன்று விதமாக இருக்கலாம். தீவிரமாக இருப்பவர்களுக்கு உடலில் முடி வளரும். உடல் பருமனாகும். மாதவிடாய்ச் சுழற்சி சரிவர இருக்காது.

அப்படியே மாதவிடாய்ச் சுழற்சி வந்தாலும் உதிரப்போக்கு தொடர்ந்து இருக்கக்கூடும். பெண்களுக்கான ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜனும் புரொஜஸ்டீரோனும் சினைப்பையில் உண்டாகின்றன.

இவை சுரப்பதில் வரக்கூடிய வேறுபாடுகளை ஒட்டியே சினை முட்டை முதிர்ச்சி, சினைமுட்டை வெளிப்படுதல், கருவுறாவிட்டால் மாதவிடாய் உதிரப்போக்கு வெளியேறுதல் போன்றவை நடக்கின்றன.

இது ஒருபுறமிருக்க, சினைப்பையில் ஆண்களுக்கான ஹார்மோனான ஆண்ட்ரோஜெனும் குறிப்பிட்ட அளவு சுரக்கிறது.

இந்த ஆண் சுரப்பின் அளவு அதிகமாகும் போது மாதவிடாய்ச் சுழற்சியில் பிரச்சினைகள் வருகின்றன. முகத்திலும் உடலிலும் முடி வளர்ச்சி வரும்.

PCOD என்பதை நேரடியாகக் கண்டறியும் பரிசோதனைகள் இல்லை. சில அறிகுறிகளைப் பார்த்த பிறகு மருத்துவர் முடிவெடுப்பார்.

என்னென்ன பரிசோதனைகள்
முதலில் எடை பரிசோதனை. பிறகு ரத்த மாதிரியை எடுத்து அதில் இன்சுலின் சுரப்பு, குளுக்கோஸ் அளவு, ஹார்மோன்களின் சுரப்புப் பற்றி ஆய்தல், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் மூலம் நீர்க்கட்டிகளைக் கண்டறிதல் நடக்கும்.
என்னென்ன பரிசோதனைகள்
PCOD எந்த அளவில் இருக்கிறது, ஹார்மோன் சுரப்பில் சீரற்ற தன்மை இருக்கிறதா, ஆண் ஹார்மோன் அதிகம் சுரக்கிறதா, இன்சுலின் எதிர்ப்பு அதிகம் இருக்கிறதா என்று பார்ப்போம்.

இவற்றை யெல்லாம் பார்த்த பிறகு ஒவ்வொருவருக்கும் அவரவருக்கு ஏற்ற மாதிரியான சிகிச்சை முறைகளைப் பின்பற்றுவோம். 

PCOD பிரச்சினையால் குழந்தை பிறக்கவில்லை என வருத்தப்படுகிறவர் களுக்கு முதலில் லேப்ராஸ்கோபி பரிசோதனையைச் செய்வோம். 

சினைப்பை, சினைக்குழல்கள், கருப்பை ஆகிய வற்றின் தன்மையை ஆராய்வோம். தேவைப்பட்டால், சினைப்பையில் இருக்கக்கூடிய நீர்க்கட்டிகளை பலூனில் ஊசி குத்தி உடைப்பது போல் லேப்ராஸ்கோபி மூலம் உடைப்போம். 

அதற்குப் பிறகு பலருக்கும் இயல்பாகக் கருமுட்டை முதிர்ச்சி அடைந்து கரு உருவாகும் தன்மை வர வாய்ப்புள்ளது. நீர்க்கட்டிகளை உடைத்துவிட்டு, கரு உருவாக வழிவகுக்கலாம். 
ஹார்மோன் சிகிச்சை மூலம் பெண்ணுக்கான ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ஆண் ஹார்மோன் சுரப்பைக் குறைத்து, நோய்க்கூறுகளைச் சரிசெய்வதுடன் PCOD பிரச்சினையையும் சரி செய்யலாம்.

குழந்தைப் பிறப்புப் பற்றிப் பெரிதாக யோசிக்காதவர்கள் கூட PCOD பிரச்சினைக்கு சிகிச்சை பெறாமல் விடக் கூடாது. 

இது நீரிழிவு நோய், உடல் எடை கூடுதல், கருப்பையில் புற்றுநோய் போன்றவற்றுக்கு வழிவகுக்கலாம் என்பதால் மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனைப்படி நடப்பது நல்லது. டாக்டர் - அமுதா ஹரி
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)