குழந்தைகளுக்கு கண்ணாடியை தவிர்க்கலாமா?

Fakrudeen Ali Ahamed
0
அந்தக் குழந்தையை மருத்துவமனைக்கு, ஓர் ஆண்டுக்குப் பின் மீண்டும் அழைத்து வந்திருந்தார்கள். கண்ணில் போட்டிருந்த கண்ணாடி இப்போது இல்லை. என்னாச்சு என்று கேட்டதற்கு, குழந்தையிடம் பதில் இல்லை.
குழந்தைகளுக்கு கண்ணாடியை தவிர்க்கலாமா?
பெற்றோர் இருவருமே அரசு அலுவலர்கள். அவர்களும் மெளனம் சாதித்தார்கள். ஏதோ சொல்லத் தயக்கப்படுவது முகத்திலேயே தெரிந்தது.

பிரச்சினை இதுதான். குழந்தைக்கு இரு கண்களிலும் ‘-3’ பவர் இருந்தது. கண்ணாடியும் போட்டிருந்தது. யாரோ சொன்னதைக் கேட்டு ஓர் ஆண்டுக்கும் மேலாகக் குழந்தை கண்ணாடி அணியவில்லை. 
இந்த நிலையில் குழந்தைக்குப் படிப்பில் வர வர ஆர்வமும் குறைந்துள்ளது. குழந்தையிடமும் நிறைய மாற்றம், பார்வையிலும் தடுமாற்றம். 

எனவே, மீண்டும் மருத்துவமனையை நாட வேண்டிய நிலை. இப்போது கண்ணாடி பவர் மேலும் அதிகமாகி விட்டது.

கண்ணாடி ஏன் அவசியம்?
குழந்தைகளுக்கு கண்ணாடியை தவிர்க்கலாமா?
குழந்தையின் கண்ணாடியைப் பொறுத்த வரையில் கடந்த ஓர் ஆண்டாகக் கண்ணாடி அணியாததால் கண் மெல்ல மெல்ல ‘சோம்பேறிக்கண்’ நிலைக்குச் செல்லத் தொடங்கி விட்டது. 

இதனால் தான் குழந்தைக்கு மேலும் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. கண்ணாடி போடாமலேயே இருந்ததால் குழந்தையால் தெளிவாகப் பொருட்களைப் பார்க்கவும் முடியவில்லை.
குழந்தையிடம் கண்ணாடி போடும்படி பக்குவமாகச் சொன்னால் போட்டுக் கொள்ளப் போகிறது. பார்வைக் குறைவு உள்ள குழந்தைக்குக் கண்ணாடி போட்டவுடன் பொருட்கள் எல்லாமே தெளிவாகத் தெரியும். 

இரண்டு, மூன்று நாட்களிலேயே கண்ணாடி இல்லாமல் குழந்தையால் நகர முடியாது. அந்த அளவுக்குக் குழந்தைக்குக் கண்ணாடி தேவையான ஒன்றாகி விடும். 

புது உலகத்தைப் பார்ப்பதுபோல் இருக்கும். தொலைக்காட்சியில் படம் தெளிவாகத் தெரிவதைப் பார்த்து மகிழ்ச்சி அடையும். 
 
பள்ளியில் கரும்பலகையில் ஆசிரியர் எழுதிப் போடுவது தெள்ளத் தெளிவாகத் தெரிவதாகக் கூறும்.

கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற பார்வைக் குறைபாடுகள் கண்ணின் உருவ அமைப்பில் ஏற்படும் பிரச்சினையால் வருபவை. 

கிட்டப்பார்வைக்கு உரிய நேரத்தில் கண்ணாடி போடா விட்டால் கண்ணாடி பவர் சிறிது சிறிதாக அதிகரித்து விடும். 
கண்ணாடி பவர் அதிக அளவில் (High Myopia) அதிகரிக்கும் போது கண்ணின் ‘மேகுலா’ சிதைவடையலாம். மேலும் கண்நீர் அழுத்த உயர்வு, கண்புரை, விழித்திரை பிரிதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்பட சாத்தியமுள்ளன.

அதிகரித்து வரும் கிட்டப்பார்வை
அதிகரித்து வரும் கிட்டப்பார்வை
கிட்டப் பார்வைக் குறைபாடு (Myopia) உலகம் முழுவதும் குழந்தைகளிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இது அதிகரிப்பதற்கான காரணம் உறுதியாகத் தெரியா விட்டாலும் செல்போன், டேப்லெட் கணினி, வீடியோ விளையாட்டுக்கள் போன்ற மின்னணு சாதனங்களை குழந்தைகள் அதிக அளவில் பயன்படுத்துவது தான் முக்கியக் காரணம் என்று ஆராய்ச்சி யாளர்கள் தெரிவிக்கிறார்கள். 

அதிக நேரம் மின்னணு சாதனங்களிலேயே மூழ்கி இருப்பதால் கிட்டப்பார்வை ஏற்படுவதாகப் பல ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
குழந்தைகள் மின்னணு சாதனங்களைக் கையாள்வதை முறைப்படுத்த வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் அண்மையில் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் செல்போன், டேப்லெட் கணினி, வீடியோ விளையாட்டுக் களைத் தொடவே கூடாது. 

ஒரு வயதிலிருந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தினமும் 3 மணி நேரம் கட்டாயம் வீட்டுக்கு வெளியில் போய் விளையாட வேண்டும். அதிகபட்சம் 1 மணிநேரம் மட்டும் மின்னணு சாதனங்களைப் பார்க்கலாம்.

வெளியில் விளையாடுவது நன்று
வெளியில் விளையாடுவது நன்று
பிள்ளைகள் வெளியே போய் விளையாடாமல் வீட்டுக்குள்ளேயே மின்னணு சாதனங்களுக்குள் அடைந்து கிடைப்பதால் சூரிய ஒளிக்கதிர்கள் போதுமான அளவுக்கு அவர்களுக்குக் கிடைப்பதில்லை. 

வீட்டுக்கு வெளியில் விளையாடும் போது சூரிய ஒளி கண்ணின் விழித்திரையில் ‘டொபமைனை’ அதிக அளவு வெளிப்படச் செய்கிறது. 

அதன் மூலம் விழிக்கோளம் நீட்சி அடைவது தடுக்கப்பட்டு, கிட்டப்பார்வை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. மேலும் கண்களைச் சுற்றியுள்ள தசைகளின் திசுக்கள், சீராக வேலை செய்வதற்கு வைட்டமின் ‘டி’ அவசியம். 
இந்தத் தசைத்திசுக்கள் விழித்திரையில் பிம்பத்தைச் சீராகக் குவிக்கச் செய்யத் துணை புரிவதுடன் விழிக்கோளத்தின் வடிவத்துக்கும் வளர்ச்சிக்கும் கூடக் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கண்ணாடி சுமையல்ல
கண்ணாடி சுமையல்ல
பிள்ளைகளை முடிந்த போதெல்லாம் வீட்டுக்கு வெளியில் போய் விளையாடச் சொல்ல வேண்டும். 

குறிப்பாக, விடுமுறை நாட்களில். டெல்லியில் கடந்த ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தினமும் காலையில் ஒரு வகுப்பு நேரம் வகுப்பறைக்கு வெளியில் மாணவர்கள் ஓடியாடி விளையாடும் வழக்கம் நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது. 

தமிழக அரசும், அனைத்து நடுநிலைப்பள்ளி வரையிலான மாணவர்களைக் காலையில் ஒரு வகுப்பு நேரமாவது வகுப்புக்கு வெளியே போய் விளையாடச் செய்யலாம்.
இனி, உங்கள் குழந்தைக்குக் கண்ணாடி போடச் சொல்லி மருத்துவரோ அல்லது பள்ளிகளில் நடைபெறும் கண் பரிசோதனையின் போது கண்டறிந்து சொல்லி யிருந்தாலோ, அதை அலட்சியப் படுத்தாதீர்கள். 

கண்ணாடியைச் சுமையாகக் கருதாமல், உங்கள் பிள்ளையின் வளமான வாழ்க்கைக்குரிய அணிகலனாக நினைத்து அணியச் செய்யுங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)