நகம் கடித்தால் புற்று நோய் வரலாம் !

Fakrudeen Ali Ahamed
‘விண்மீன் கொண்டு விரலில் நகம் சமைத்து’ என்று வர்ணித்துப் பாடுவது... மருதாணி வைத்து அழகு பார்ப்பது... நீளமாக வளர்ப்பது... பாலீஷ் போடுவது... எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். 
நகம் கடிப்பது... நம்மில் பலருக்கு தவிர்க்க முடியாத ஓர் அன்றாடப் பழக்கம். இதற்கு என்ன காரணம்? அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன?

மனச்சோர்வும் குழந்தைப் பருவத்தில் இருந்தே இது பழக்கமாகிவிடுவதும் முக்கியக் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். ‘உலக அளவில் 30% குழந்தைகள், 45% பதின்ம வயதினர், 25% முதியவர்கள்

இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள்’ என்கிறது ஓர் ஆய்வு. ஸ்டைலுக்காக செய்பவர்கள்தான் அதிகம். மகிழ்ச்சியில், தனிமையில், விரும்பத்தகாத செயல்களை செய்கிற போது நகம் கடிப்பவர்கள் ஏராளமானோர். 

* விளைவுகள் 

நகம், பாக்டீரியா வளரும் இடம். சல்மனெல்லா (Salmonella), இ.கோலி (E.Coli) பாக்டீரியாக்கள் நகம், விரல் நுனிகளில் இருக்கும் அழுக்குகளில் இருக்கின்றன.

நகங்களைக் கடிக்கும் போது அவை வாய் வழியே உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும். இதனால் எளிதில் நோய்த் தொற்று ஏற்படும்.

உடல் எதிர்ப்புச் சக்தி பாதிப்படைந்து நோய்களுக்கு வழிவிட காரணமாகும். பாரனைஷியா (Paronychia) என்கிற தோல் வியாதி ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

நகங்களில் இருக்கும் பாக்டீரியா, ஈஸ்ட், நுண்ணுயிரிகள் ஒன்று சேர்ந்து நகங்களின் மேல் தோலை சிவப்பாக்கி, தடித்து வீங்க வைத்துவிடும். காலப்போக்கில் சீழ் கட்டவும் வாய்ப்பிருக்கிறது. அதை அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே சரி செய்ய முடியும்.

நகம் கடிப்பவர்களின் விரல் நுனிகளில் கிருமிகள் சேர்ந்து ஹியூமன் பாப்பில்லோமா வைரஸ் (human papilloma virus) தாக்குதல் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

இது அதிகமாகும் போது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் உண்டு. நகம் கடிப்பதால் பற்களில் பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் ஊடுருவி மேல் தாடையையும் கீழ் தாடையையும் முழுதாக மூட முடியாத நிலை கூட ஏற்படும். 

* மனநிலை மாறுபாடுகள் 

அமெரிக்கன் மனநல ஆய்வகம், நகம் கடித்தலை எண்ண சுழற்சி நோயின் (Obsessive Compulsive Disorder) அறிகுறி என்கிறது. பிடிக்காத செயலை செய்யும் போதும்.

சோர்வு தரும் சூழ்நிலைகளிலும் நகம் கடிக்கும் பழக்கம் ஆரம்பிக்கிறதாம். சிறியவர்கள் நகம் கடிப்பதால் செரிமானமாகாத உணவுத் துணுக்குகள் குடல் வால் பகுதியில் சேகரமாகும்.

அதனால், ‘அப்பன்டிசைடிஸ்’ எனப்படும் குடல் வால் வருவதற்கும் வாய்ப்புண்டு. இதை அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும். நகம் கடிப்பதை சிறு வயதில் ஆரம்பித்து,

பதின்ம வயதில் அதிகமாக்கி, இளம் வயதில் பெரும்பான்மையானோர் நிறுத்திவிடுவார்கள். எனவே, ஆரம்பக்கட்டத்தில், சிறு வயதிலேயே இதைத் தடுப்பது நல்லது. 

குழந்தைகளின் நகம் கடிக்கும் பழக்கத்தை நிறுத்த சில எளிய வழிகள் 

* எப்போதும் நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருத்தல். முனைகளை இப்படி வழுவழுப்பாக்கிவிட்டால் கடிக்கும் ஆர்வம் குறைந்து விடும்.

* நகங்களைச் சுற்றி பேண்ட் எய்டுகள், டேப்புகளை சுற்றி வைக்கலாம்.

* ஸ்வெட்டர் பின்னுதல், கைவினைப் பொருட்கள் செய்தல் என கைகளுக்கும் விரல்களுக்கும் அதிக வேலைகள் கொடுக்கலாம்.

* விரல் நுனிகளில் புளிப்பான சாஸ்கள், பிடிக்காத சுவை கொண்ட க்ரீம்களை தடவலாம். நகம் கடிக்கும்போது சலிப்பு வந்து கடிப்பது குறைய வாய்ப்பிருக்கிறது.

* நகம் கடிப்பதால் வரும் கேடுகளை எளிய முறையில் எடுத்துச் சொல்லி புரிய வைக்கலாம். 

பெரியவர்களின் நகம் கடிக்கும் பழக்கத்தை நிறுத்த சில எளிய வழிகள் 

* பல ஆண்டுகளாக நகம் கடிக்கும் பழக்கத்தை விட முடியாதவர்கள் மனநல நிபுணர்களிடம் ஆலோசனை பெறலாம். மனநலப் பயிற்சிகளை மேற்கொண்டு பயன் பெறலாம்.

* வாழ்க்கை முறைகளை எளிய முறையில், அதிக மனவருத்தம் தராத வகையில் அமைத்துக் கொண்டால், பிரச்னைகளை பெரிதாக்காமல் அமைதியான வாழ்க்கையைத் தொடர்ந்தால் நகம் கடிக்கும் பழக்கம் தொடராது.
* அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ‘ஈ.எஃப்.டி’ எனப்படும் ‘உணர்வுகளை சுதந்திரமாக அமைத்துக் கொள்ளுதல்’ என்னும் சிகிச்சை, முறையான நிபுணர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது.

இதன் மூலம் நகம் கடித்தலை மட்டுமல்ல... வேறு சில பிரச்னைகளையும் தீர்க்கலாம்.

* ‘பாசிடிவ் திங்கிங்’ அணுகுமுறையை பின்பற்றலாம். ஒன்றை அழுத்தமாக நினைவில் கொள்வது நல்லது. நகம் கடிப்பது ஆரோக்கியக் கேடு. அதைத் தவிர்ப்பது நல்லது.

நகம்கடிப்பவர்களின் விரல் நுனிகளில் கிருமிகள் சேர்ந்து ஹியூமன் பாப்பில்லோமா வைரஸ் தாக்குதல் ஏற்படலாம். இது அதிகமாகும்போது புற்றுநோய்வருவதற்கான வாய்ப்பும் உண்டு.
Tags: