பெண்கள் புகைப் பிடிக்கக்கூடாது? – அதிர்ச்சியளிக்கும் காரணம் !

Fakrudeen Ali Ahamed
சர்க்கரை நோய் அல்லது இரத்த அழுத்தமுள்ள பெண்கள் புகைப் பிடித்தால், அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு ஆண்களைவிட அதிகமுள்ளதாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
ஆண்களுக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சையும், புகைப் பழக்கத்தி லிருந்து விடுபடு வதற்கான ஆதரவும் பெண்களுக்கு வழக்கப்பட வேண்டுமென்று பிஎம்ஜே என்ற சஞ்சிகையில் வெளியாகவுள்ள அந்த ஆராய்ச்சி முடிவுகளில் குறிப்பிடப் பட்டுள்ளது.

பெண் நோயாளிகள் ஆபத்தில் சிக்குவதற்கு முன்னரே அவர்களை அடையாளம் காண்பதில் மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டுமென்று அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப் பட்ட இந்த ஆய்வில் 40-69 வயதுக்குட்பட்ட பிரிட்டனை சேர்ந்த ஐந்து லட்சம் பேரின் பயோபேங்க் தரவுகள் பயன் படுத்தப்பட்டன.

ஆய்வு மேற்கொள்ளப்பட்ட ஏழு வருட காலத்தில் 5,081 பேருக்கு முதல் முறையாக மாரடைப்பு ஏற்பட்டது. அதில் மூன்றில் ஒருவர் பெண்ணாக இருந்தார்.

அனைத்து வயது ஆண்களுக்கு ஏற்படுவதை விட பெண்களுக்கு குறைந்தளவே மாரடைப்பு ஏற்பட்டாலும், சில ஆபத்து காரணிகள் பெண்களில் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்துவது தெரிய வந்துள்ளது.
புகைப் பிடிக்காத பெண்களை விட புகைப் பிடிக்கும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுத்து வதற்கு மூன்று மடங்கு வாய்ப்பிருப்பதாக இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. 

ஆனால், ஆண்களில் இரண்டு மடங்கு மட்டுமே ஆபத்தை கூட்டுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. உயர் இரத்த அழுத்தம் கொண்ட பெண்களுக்கு ஆண்களை விட 83 சதவீதம் மாரடைப்பு ஏற்படுவதற் கான வாய்ப்புள்ளது. 

மேலும், முதல், இரண்டாம் வகை சர்க்கரை நோயுடைய ஆண்களை விட பெண்களுக்கே அதிகளவு பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்ப தாகவும் இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது.

பாலினம் சார்ந்து இந்த பாதிப்புகள் எப்படி மாறுபடுகின்றன என்பது குறித்து தங்களுக்கு இதுவரை தெரியவில்லை என்றும், ஆனால் உயிரியல் காரணிகள் முக்கிய காரணமாக இருப்பதற்கு வாய்ப்புள்ள தாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 
உதாரணமாக, மோசமான உணவுமுறை, வாழ்க்கைப் போக்கின் காரணமாக ஏற்படும் இரண்டாம் வகை சர்க்கரை நோய் கொண்ட பெண்களுக்கு ஆண்களை விட இதயம் சம்பந்தமான பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது.

தங்களுக்கு இதயம் சம்பந்தமான பிரச்சனை ஏற்பட்டுள்ளதை பெரும்பாலான பெண்கள் உணருவதில்லை என்றும், அறிந்தவர்கள் சரியான மருத்துவ சிகிச்சையை பெறுவதில்லை எனவும் இந்த ஆய்வு முடிவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

பெண்களை விட ஆண்களுக்கே அதிகளவு மாரடைப்பு ஏற்பட்டாலும், பிரிட்டனில் பெண்கள் அதிகளவு உயிரிழப்பதற்கு இதய நோயே காரணமாக உள்ளதென்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய இந்த ஆராய்ச்சியின் முதன்மை ஆராய்ச்சி யாளரும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரி யருமான எலிசபெத் மில்லெட், 
“இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் பெண்களில் அதிகளவு பாதிப்பு ஏற்படுத்து வதையும், ஆண்களை விட தங்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது என்பதையும் பெண்கள் உணர வேண்டும். 

அதற்காக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப் பட்டாலும், பெரும்பாலான பெண்களுக்கு ஆபத்தின் வீரியம் புரியவில்லை” என்று அவர் கூறுகிறார்.

“உயிரியல் காரணிகள், சமூக சூழலின் காரணமாக ஏற்படுவதாக கருதப்படும் இந்த சிக்கலான பிரச்சனையை கட்டுப் படுத்துவதற்கு நீண்ட காலமாகும்” என்று அவர் மேலும் கூறினார்.

அதுமட்டுமின்றி, சர்க்கரை நோயும், உயர் இரத்த அழுத்தமும், புகைப்பிடிக்கும் பழக்கமும் கொண்ட பெண்கள், “பெரும்பாலான ஆண்களுக்கு உள்ள ஆபத்தோடு தங்களை ஒப்பிட்டு கொள்ள வேண்டும்” என்று ஆராய்ச்சி யாளர்கள் மேலும் கூறியுள்ளனர்.
Tags: